பயன்படுத்திக்கோங்க... ஆதார் திருத்தம்... அஞ்சலகங்களில் சிறப்பு முகாம்கள் தொடக்கம்!
வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, அஞ்சல் துறை சார்பில் ஆதார் திருத்தச் சிறப்பு முகாம்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில், மக்கள் கூட்டம் இன்றி எளிதாகப் பதிவுகளை மேற்கொள்ள இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத் தலைமை அஞ்சலகங்கள் மற்றும் அந்தந்த கோட்டத்தின் கீழ் செயல்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய அஞ்சலகங்களில் இந்தச் சிறப்புச் சேவைகள் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களுக்குச் சென்று முகாம் குறித்த விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

இந்தச் சிறப்பு முகாம்களில் இதுவரை ஆதார் அட்டை இல்லாதவர்கள் புதியதாகப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு எவ்விதக் கட்டணமும் கிடையாது. 5 முதல் 7 வயது மற்றும் 15 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கைரேகை மற்றும் கருவிழி விபரங்களைப் புதுப்பித்தல் அவசியமாகும். இச்சேவை முற்றிலும் இலவசம்.
பெயர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, பாலினம், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றில் உள்ள மாற்றங்களைச் சரி செய்து கொள்ளலாம்.

மத்திய அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களின் அடிப்படையில் புதிய பதிவு மற்றும் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் இலவசம். மற்ற திருத்தங்கள் ரூ. 75 (ஜிஎஸ்டி உட்பட்டு).
திருத்தங்களை மேற்கொள்ள விரும்புவோர் அசல் பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாள மற்றும் முகவரிச் சான்றாகக் கொண்டு வர வேண்டும். தொலைபேசி எண்ணைப் புதுப்பிக்க விரும்புவோர், அந்தச் சிம் கார்டு உள்ள மொபைலை உடன் கொண்டு வருவது ஓடிபி (OTP) பெற வசதியாக இருக்கும்.
