பாலியல் புகார்... மலையாள நடிகர் சியாஸ் கரீமின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
மலையாளத் திரையுலகின் பிரபல நடிகர் சியாஸ் கரீம் மீது கோழிக்கோட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அதிர்ச்சிகரமான பாலியல் புகாரை அளித்துள்ளார். கடந்த 2024 ம் ஆண்டு தன்னை காதலிப்பதாகக் கூறி நடிகர் சியாஸ் கரீம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அந்தப் பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது ஆபாசப் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி அந்த நடிகர் பணம் பறித்ததாகவும் அந்தப் பெண் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் எர்ணாகுளம் மாவட்டம் பாலாரி வட்டம் போலீசார் நடிகர் சியாஸ் கரீம் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் கைது நடவடிக்கைக்கு அஞ்சிய நடிகர் சியாஸ் கரீம், இந்த வழக்கில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் கோரி எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அந்த முன்ஜாமீன் மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த முடிவைத் தொடர்ந்து நடிகர் சியாஸ் கரீம் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்பதால் மலையாளத் திரையுலகில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. போலீசார் ஏற்கனவே இந்த விவகாரத்தில் தேவையான சாட்சியங்களைச் சேகரித்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நடிகரைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பாலியல் அத்துமீறல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற புகார்கள் வலுவாக உள்ளதால் இந்த வழக்கு அந்த நடிகருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
