விஜய்யை சந்திக்க தமிழகம் வரும் மலேசிய பிரதமர்!
தமிழகத்தில் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தொலைபேசி வாயிலாகத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வரும்போது தமிழகத்திற்கு வர விருப்பம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, அதன் தலைவர் விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இவருக்குப் பல்வேறு மாநில முதல்வர்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சர்வதேச நாடான மலேசியாவின் பிரதமர் அன்வர் இப்ராஹிம், முதலமைச்சர் விஜய்யைத் தொலைபேசியில் நேரடியாகத் தொடர்புகொண்டு தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

மலேசியாவில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வரும் சூழலில், மலேசியப் பிரதமரின் இந்த வாழ்த்து இருதரப்பு உறவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது அதிகாரப்பூர்வ 'X' சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காகவும் வரும் செப்டம்பர் மாதம் நான் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளேன். அந்தப் பயணத்தின் போது, வாய்ப்பு கிடைத்தால் தமிழகத்திற்கும் ஒரு குறுகிய பயணமாக வருவேன்" என்று அன்வர் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியப் பிரதமரின் இந்தத் திடீர் அறிவிப்பு தவெக தொண்டர்கள் மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் உற்சாகத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் மாதம் மலேசியப் பிரதமர் சென்னைக்கு வரும் பட்சத்தில், கோட்டையில் முதலமைச்சர் விஜய்யை அவர் நேரில் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகவும், இதன் மூலம் மலேசியா - தமிழ்நாடு இடையேயான வர்த்தகம், கலை மற்றும் கலாச்சார உறவுகள் அடுத்த கட்டத்திற்கு நகரும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
