தூத்துக்குடி மீனவர்களின் 3 விசைப்படகுகளுக்கு ரூ.4.8 கோடி அபராதம் - மாலத்தீவு அரசு உத்தரவு!
மாலத்தீவு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறித் தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் 3 விசைப்படகுகளுக்கு இந்திய மதிப்பில் மொத்தம் ரூ.4.8 கோடி அபராதம் விதித்து மாலத்தீவு அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த சூசைபாக்கியம், மைக்கேல் ஜான்சங்கர் மற்றும் ரமேஷ்குமார் ஆகியோருக்குச் சொந்தமான 3 செவுள்வலை விசைப்படகுகளில் மொத்தம் 25 மீனவர்கள் கடந்த அக்டோபர் 1, 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அதிகாலை மாலத்தீவில் இருந்து சுமார் 150 கடல்மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மாலத்தீவு கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 3 படகுகளையும், 25 மீனவர்களையும் சிறைபிடித்து மாலத்தீவுக்குக் கொண்டு சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மாலத்தீவு மீன்பிடி, விவசாயம் மற்றும் கடல்வளங்கள் அமைச்சகம், ஒரு படகிற்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.60 கோடி வீதம் 3 விசைப்படகுகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.4 கோடியே 80 லட்சத்து 72 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த அபராதத் தொகையை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் நீதிமன்றம் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவில் தவிக்கும் 25 தமிழக மீனவர்களையும், அவர்களின் வாழ்வாதாரமான விசைப்படகுகளையும் அபராதமின்றி உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து தூதரக ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ அமைப்பினரும் குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
