15% பணிகள் முடிந்த நிலையில் மாமல்லன் நீர்த்தேக்க திட்டப் பணிகள் நிறுத்தம்!
சென்னை கானத்தூர் பகுதியில் முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தின் பணிகள் தற்போது புதிய அரசால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையின் அடுத்தடுத்த ஆண்டுகளின் குடிநீர் தேவையை மையமாகக் கொண்டு, கானத்தூரிலிருந்து கொக்கிலமேடு வரை 5,161 ஏக்கர் பரப்பளவில் 1.65 டி.எம்.சி. கொள்ளளவுடன் 'மாமல்லன் நீர்த்தேக்கம்' அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கவும் திட்டமிடப்பட்டது.
இப்பகுதியில் நீர்த்தேக்கம் அமைப்பதால் உப்பளக் கழிகள் அழிக்கப்படுவதாகவும், மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித் தொழில் மற்றும் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் எனவும் மீனவர்களும் சூழலியல் ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வந்தனர்.
இத்திட்டத்திற்கான முதற்கட்டக் கரை அமைக்கும் பணிகள் சுமார் 15 சதவீதம் வரை நிறைவடைந்திருந்த நிலையில், தற்போது அப்பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
