முன்னறிவிப்பில்லாமல் மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் 'திடீர்' மூடல் - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

 
மாமல்லபுரம் கலங்கரை விளக்கம்

யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலகப் பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் வருகை தருகின்றனர். இங்குள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம் மற்றும் அர்ஜுனன் தபசு உள்ளிட்ட இடங்களைப் பார்ப்பதோடு, கலங்கரை விளக்கத்தின் உச்சிக்குச் சென்று ஒட்டுமொத்த நகரத்தின் அழகையும் ரசிப்பது பயணிகளின் வழக்கமாகும்.

மாமல்லபுரம் கலங்கரை விளக்கமானது மிகவும் பழமையான கட்டுமானத்தைக் கொண்டது. இதன் உறுதித்தன்மையை ஆய்வு செய்யவும், சில பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் இந்தியக் கலங்கரை விளக்கம் மற்றும் கலங்கரை விளக்கக் கப்பல்கள் துறை (Directorate General of Lighthouses and Lightships) முடிவெடுத்துள்ளது. வழக்கமாக இது போன்ற பராமரிப்புப் பணிகள் நடைபெறும் போது முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால், இன்று மதியத்திலிருந்து திடீரென நுழைவுச் சீட்டு வழங்கும் இடம் மூடப்பட்டு, கதவுகள் பூட்டப்பட்டன.

மாமல்லபுரம் கலங்கரை விளக்கம்

நீண்ட தூரத்திலிருந்து இந்த இடத்தைப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள், திடீர் மூடல் காரணமாக ஏமாற்றமடைந்தனர். அதிகாரிகளிடம் கேட்டபோது, பாதுகாப்பு காரணங்களுக்காகவும், தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரி செய்யவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலங்கரை விளக்கம் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், ஆய்வுகள் மற்றும் சிறிய அளவிலான பழுதுபார்ப்புப் பணிகள் முடிந்தவுடன் ஓரிரு நாட்களில் மீண்டும் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகள் கலங்கரை விளக்கத்திற்குச் செல்வதைத் தவிர்த்து, மற்ற தொல்லியல் சின்னங்களைப் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.