திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து மம்தா நீக்கம் - புதிய தலைவராக அரூப் ராய் நியமனம்!
மேற்கு வங்காளத்தில் நிலவி வரும் அரசியல் சூழலில் ஒரு முக்கிய திருப்பமாக, அகில இந்தியத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை நீக்குவதாக அக்கட்சியின் அதிருப்திப் பிரிவு அறிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக அரூப் ராய் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சிக் கட்டிலில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அண்மையில் முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும் சரிவைச் சந்தித்தது: இத்தேர்தலில் பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து சுவேந்து அதிகாரி மேற்கு வங்காளத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெறும் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுத் தோல்வியடைந்தது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் பிளவு ஏற்பட்டது. சட்டமன்றத்திற்குத் தேர்வான 80 உறுப்பினர்களில் 60 எம்.எல்.ஏ.க்கள் மம்தா பானர்ஜிக்கு எதிராகத் திரும்பி அதிருப்தி அணியாக மாறினர். இந்த அதிருப்தி குழு தங்களின் தலைவராக ரிதப்ரதா பானர்ஜியைத் தேர்ந்தெடுத்தது. சபாநாயகரும் இவரை அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்தார்.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்ததால் மம்தா பானர்ஜியால் அவைக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத்திலும் அவருக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த 28 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 20 பேர் மம்தா பானர்ஜியின் தலைமைக்கு எதிராகத் திரும்பி, ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான 60 சட்டமன்ற உறுப்பினர்களின் அதிருப்தி குழுவிற்குத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
தற்போது பெரும்பான்மையான சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ள அதிருப்தி குழு, மம்தா பானர்ஜியைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அரூப் ராயைப் புதிய தலைவராக அறிவித்துள்ளது. இந்த புதிய தலைவர் நியமனம் மற்றும் கட்சியின் உரிமை கோரல் தொடர்பான அதிகாரப்பூர்வக் கடிதத்தை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விரைவில் வழங்க அதிருப்தி குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பெறுவதில் இரு தரப்பிற்கும் இடையே சட்டப் போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
