மாணவியை ரம்பத்தால் தாக்கியவன் கைது; தப்பியோட முயன்றபோது துப்பாக்கிச் சூட்டில் வலது கால் அகற்றம்!
ஆந்திர மாநிலம் அனந்தபூரில், வகுப்பறைக்குள் புகுந்து பள்ளி மாணவியை மர அறுக்கும் ரம்பத்தால் கொடூரமாகத் தாக்கிய இளைஞரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த நிலையில், காயம் அடைந்த அவரது வலது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
அனந்தபூர் மாவட்டம் ரப்தாடு பகுதியில் உள்ள அரசு பஞ்சாயத்து உயர்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்புப் பாடம் நடந்து கொண்டிருந்த போது 21 வயதான ஹேமந்த் என்ற இளைஞர் மரம் அறுக்கும் ரம்பத்துடன் திடீரென வகுப்பறைக்குள் நுழைந்துள்ளார். அங்குப் படித்துக் கொண்டிருந்த தனது உறவினரான மாணவியைக் கொடூரமாகத் தாக்கியதில், அம்மாணவியின் முகம், தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டது.

காதலை ஏற்க மறுத்த காரணத்திற்காகவே ஹேமந்த் இந்தத் தாக்குதலை நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மாணவி மீதான தாக்குதலுக்குப் பின் தப்பி ஓடி வனப்பகுதியில் பதுங்கியிருந்த ஹேமந்தை போலீசார் பிடிக்க முயன்ற போது, அவர் காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிக்க முயன்றுள்ளார். இதையடுத்து, தற்காப்பிற்காகப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஹேமந்தின் வலது காலில் குண்டுபாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டது.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் திசுக்கள் அழுகும் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவரது வலது காலைத் துண்டித்து அகற்றியுள்ளனர். காயமடைந்த மாணவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சுயநினைவு திரும்பியதும் முழுமையான வாக்குமூலம் பெறப்படும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
