பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்குத் துப்பாக்கியுடன் வந்த நபர் போலி அடையாள அட்டையுடன் கைது - மும்பையில் பரபரப்பு!
மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள ஜியோ உலக மையத்தில் இன்று நடைபெற்ற 'குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட்' நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் பாதுகாப்புப் பணியில் தீவிரத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அரங்கத்திற்குள் நுழைய முயன்ற 24 வயது ரோஹன் பரேக் என்பவர், தான் பிரதமரின் அலுவலகமான PMO-வின் அதிகாரி என்று கூறிக்கொண்டு போலியான அடையாள அட்டையைக் காட்டியுள்ளார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி தீவிரமாக விசாரித்தனர். மேலும், அவருடன் துப்பாக்கியுடன் வந்த பாதுகாப்பாளர் ஒருவரும் உடனிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாகத் தடுத்து வைக்கப்பட்டார்.

இவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாதுகாவலர்களின் அதிவேக நடவடிக்கையால் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வுப் பகுதியில் நடக்கவிருந்த பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
