மனைவியைக் கொன்று, உடலை எரித்துச் சாம்பலைக் கிணற்றில் கரைத்த கணவன் கைது!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோட்டக்குடி பகுதியில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து, அவரது உடலை எரித்துச் சாம்பலைக் கிணற்றில் கரைத்த கணவனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த கோட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கும் கார்த்திகா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்குப் பிறகு கார்த்திகாவின் நடத்தை மீது பிரபாகரனுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த கார்த்திகா, கணவரைப் பிரிந்து தனது தாய் வீட்டுக்குச் சென்று தங்கியுள்ளார்.

கார்த்திகாவின் வீட்டிற்குச் சென்ற பிரபாகரன், இனிமேல் சண்டை போட மாட்டேன் என்று சமாதானம் பேசி கார்த்திகாவை மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், வீட்டிற்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன், கார்த்திகாவை அங்குள்ள வயல்வெளிக்குக் கூட்டிச் சென்று கொடூரமாகக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
கொலை செய்ததை எவரும் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக, கார்த்திகாவின் உடலை அங்கேயே தீ வைத்து எரித்துள்ளார். பின்னர், உடல் முழுமையாக எரிந்ததும் அதன் சாம்பலை எடுத்துச் சென்று அருகில் இருந்த விவசாயக் கிணற்றில் கொட்டிக் கரைத்து, தடையங்களை முற்றிலும் மறைக்க முயன்றுள்ளார்.

கார்த்திகா மாயமானது குறித்து எழுந்த சந்தேகத்தின் பேரில், உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரபாகரனைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் கெடுபிடி விசாரணையில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியைக் கொலை செய்து, உடலை எரித்துச் சாம்பலைக் கிணற்றில் கரைத்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து போலீசார் பிரபாகரனைக் கைது செய்து, கொலை நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று தடையங்களைச் சேகரித்து வருகின்றனர்.
