பெண்ணைக் கட்டிப்போட்டு 21 சவரன் நகை கொள்ளை - தவெக நிர்வாகி கைது!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்போட்டு 21 சவரன் நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், தவெக நிர்வாகி ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் காரியாபட்டி அருகேயுள்ள கிராமம் ஒன்றில் பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர், வீட்டிற்குள் புகுந்து அப்பெண்ணைக் கயிற்றால் கட்டிப்போட்டு மிரட்டியுள்ளனர். அவரது வீட்டில் பீரோவில் இருந்த 21 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்து விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தனிப்படை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் ஏற்கனவே இரு சந்தேக நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். கைதான இருவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், இந்தக் கொள்ளைச் சம்பவத்தை முன்னின்று திட்டமிட்டுச் செயல்படுத்தியது தவெக நிர்வாகி தான் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது.
கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்ட தவெக மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் சரவண குமார் என்பவரைக் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சரவண குமாரிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டு வருவதுடன், இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
