வீடியோ காலில் நிர்வாணமாக இளம்பெண்ணை வரச்சொல்லி மிரட்டிய வாலிபர் கைது!
ஆன்லைன் வீடியோ அழைப்பின் போது இளம்பெண்ணை மிரட்டி ஆடையைக் கழற்றச் சொல்லி வற்புறுத்தியதுடன், பணம் பறிக்க முயன்ற சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரியாரம் பகுதியைச் சேர்ந்தவர் லிஜேஷ் (39). இவர், ஆன்லைன் வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை மிரட்டி, அவரது ஆடைகளைக் கழற்றும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும், அந்தப் பெண்ணிற்குத் தெரியாமல் அந்த வீடியோ உரையாடலைப் பதிவு செய்து வைத்துள்ளார்.
தான் பதிவு செய்து வைத்துள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுப் பரப்பி விடுவதாக மிரட்டி, அந்த இளம்பெண்ணிடம் இருந்து பணத்தைப் பறிக்க லிஜேஷ் முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாகச் சம்பவம் குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்திப் பரியாரத்தைச் சேர்ந்த லிஜேஷைக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். இணையவழியில் பெண்களை மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
