9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்.. அடித்தே கொன்ற பொதுமக்கள்!
ஹைதராபாத்தில் 9 வயது சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய 55 வயது நபர் ஒருவரை, ஆத்திரமடைந்த பொதுமக்கள் கும்பலாகச் சேர்ந்து அடித்தே கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நடத்தப்பட்ட இந்த கும்பல் கொலை ஆகிய இரண்டு சம்பவங்கள் குறித்தும் போலீசார் தற்போது தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹைதராபாத்தின் ஜியாகுடா பகுதியில் வசித்து வந்த 55 வயதான அப்துல் அஜீஸ் என்பவர் அந்தப் பகுதியில் தேநீர் விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த புதன்கிழமையன்று, அவர் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவருக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்துள்ளார். இதனைத் தற்செயலாகக் கவனித்த அக்கம்பக்கத்தினர் உடனடியாகச் சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, பெற்றோர் தங்களது வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அஜீஸ் சிறுமிக்குக் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்பது உறுதியாகி அதிர்ச்சியளித்தது.

இந்தக் கொடூரச் செயல் குறித்து அஜீஸிடம் கேட்கச் சென்ற போது, அங்குப் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் கும்பலாகச் சேர்ந்து அஜீஸைத் தெருவில் இழுத்து வந்து தடிகளாலும் கட்டைகளாலும் கொடூரமாகத் தாக்கி, உதைத்துக் குத்தினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்தார்.
இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குல்சும்புரா போலீசார், பலத்த காயமடைந்த அஜீஸை மீட்டு முதலுதவி அளித்து, சிகிச்சைக்காக உஸ்மானியா பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்தத் இரட்டைச் சம்பவங்கள் தொடர்பாகக் குல்சும்புரா போலீசார்இரண்டு தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அஜீஸை அடித்தே கொன்ற கும்பல் மீது, பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவு 105 (கொலைக்கு நிகராகாத மரணம் விளைவித்தல்) மற்றும் 3(5) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற குற்றத்திற்காக, உயிரிழந்த அப்துல் அஜீஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் தனியாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. "சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதியும், சட்டத்தை மதிக்காமல் ஒருவரை அடித்துக் கொன்ற கும்பலின் செயலும் கடுமையான குற்றங்களாகும்" என்று சமூக வலைதளங்களில் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
