லேடீஸ் ஹாஸ்டலில் புகுந்து பெண்களின் உள்ளாடைகளைத் திருடிய இளைஞர் - நெல்லையில் அதிர்ச்சி!
நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் உள்ள மகளிர் விடுதிக்குள் மதில் சுவரைக் குதித்து நுழைந்து, அங்கு காயவைக்கப்பட்டிருந்த பெண்களின் உள்ளாடைகளை மூட்டை கட்டிக் கொண்டு திருடிச் சென்ற இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் செயல்பட்டுவரும் மகளிர் விடுதி ஒன்றில், கடந்த 13-ம் தேதி அதிகாலை சுமார் 4 மணியளவில் மர்ம நபர் ஒருவர் சுற்றுச்சுவரைத் தாண்டிக் குதித்து விடுதி வளாகத்திற்குள் நுழைந்துள்ளார்.
விடுதியில் தங்கியுள்ள பெண்கள் துவைத்துக் காய வைத்திருந்த உள்ளாடைகளைத் தேடித் திரட்டிய அந்த நபர், அவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பெரிய மூட்டையாகக் கட்டிக்கொண்டு, மீண்டும் அதே சுவரேறித் தப்பியோடியுள்ளார்.
இது குறித்துத் தரப்பட்ட புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில், மேலப்பாளையத்தைச் சேர்ந்த 27 வயதான தமீமுன் அன்சாரி என்பவர் இந்தத் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவரை காவல்துறையினர் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
