குமரியில் 6 அடி நீள மலைப்பாம்பைப் பிடித்த வாலிபர் - வனத்துறையிடம் பாதுகாப்பாக ஒப்படைப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே திருவிதாங்கோடு கிளைக் கால்வாயில் மிதந்து வந்த 6 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பை வாலிபர் ஒருவர் துணிச்சலாகப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தக்கலை அருகே குமாரபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பூவங்காபறம்பு வழியாகச் செல்லும் திருவிதாங்கோடு கிளைக் கால்வாய் கரையின் உடைந்த பகுதியில், சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று தலையை நுழைத்துக்கொண்டு தண்ணீரில் மிதந்துள்ளது. அந்த வழியாக வந்த ஜெரோம் என்பவர் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அப்பகுதி மக்களுக்குத் தகவல் தெரிவித்தார். விஷயம் பரவியதும் மலைப்பாம்பைப் பார்க்க ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர்.
இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டாலும், அவர்கள் வருவதற்குள் பாம்பு தண்ணீருக்குள் சென்று மறைந்துவிடும் எனப் பொதுமக்கள் அஞ்சினர். அப்போது கூட்டத்திலிருந்த வாலிபர் ஒருவர் திடீரெனக் கால்வாயில் இறங்கி, அந்த 6 அடி நீள மலைப்பாம்பை நெஞ்சுரத்துடன் லாவகமாகப் பிடித்துக் கரைக்குக் கொண்டு வந்தார்.
வாலிபரின் இந்தத் துணிச்சலான செயலை அங்கிருந்தவர்கள் பாராட்டிய நிலையில், பொதுமக்கள் அந்த மலைப்பாம்பைப் பத்திரமாகச் சாக்குப்பையில் போட்டுக் கட்டினர். பின்னர்ச் சித்திரங்கோட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்குக் கொண்டு சென்று அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
