குடும்பமே சிதைந்த சோகம் - ஆன்லைன் வர்த்தகத்தில் ₹35 லட்சத்தை இழந்தவர் தற்கொலை!
எளிதாகப் பணம் சம்பாதிக்கலாம் என நம்பி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒரு நபர், தனது ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் (40). இவர் அப்பகுதியில் சிம்கார்டு விற்பனை மற்றும் ரீசார்ஜ் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்குத் தமிழ் (32) என்ற மனைவியும், 13 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர். சுமாரான வருமானம் வந்த போதிலும், தனது குடும்பத்தை நாராயணன் மகிழ்ச்சியாகவே நடத்தி வந்துள்ளார்.

அதிக லாபம் ஈட்டும் நோக்கில், நாராயணன் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் வர்த்தகத்தில் ஆர்வம் காட்டியுள்ளார். ஆரம்பத்தில் சிறு தொகையை முதலீடு செய்தவர், பின்னாளில் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கிப் பெரிய அளவில் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போனதுடன், இதுவரை சுமார் ₹35 லட்சம் வரை அவர் பணத்தை இழந்துள்ளார்.
கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி மற்றும் பணத்தை மீட்டெடுக்க முடியாத விரக்தியால் கடந்த சில நாட்களாக நாராயணன் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தியுள்ளார். உயிருக்குப் போராடிய அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பென்னாகரம் போலீசார், நாராயணன் எந்த செயலியைப் பயன்படுத்திப் பணத்தை இழந்தார்? யாரிடமெல்லாம் கடன் வாங்கினார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறு தவறான முடிவு, இரண்டு குழந்தைகளை அனாதையாக்கியுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
