விநாயகர் சிலையைக் கரைக்கச் கடலில் இறங்கிய வாலிபர் மூழ்கி பலி!

 
கடலில் மூழ்கி

திருவொற்றியூரில் வீட்டில் வைக்கப்பட்ட சிறிய விநாயகர் சிலையைக் கடலில் கரைக்கச் சென்ற வாலிபர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (35). தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த முன்தினம் விநாயகர் சதுர்த்தியையொட்டி தனது வீட்டில் சிறிய விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்துள்ளார். பின்னர் மாலையில் அந்த விநாயகர் சிலையை எண்ணூர் பாரதியார் நகர் அருகே உள்ள கடலில் கரைத்துவிட்டு வருவதாக மோட்டார் சைக்கிளில் சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

குடும்பத்தினர் தேடிய போது கடற்கரையில் அவரது மோட்டார் சைக்கிளும், செல்போனும் மட்டும் இருந்தது தெரியவந்தது. எண்ணூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உறவினர்களின் கோரிக்கையை ஏற்று திருவொற்றியூர் எம்.எல்.ஏ. செந்தில்குமாரிடம் முறையிடப்பட்டது. இதனையடுத்து, தீயணைப்புத் துறையினர் மற்றும் மீனவர்கள் உதவியுடன் கடலில் தேடப்பட்டு நேற்று காலை கமலக்கண்ணனின் உடல் மீட்கப்பட்டது. காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.