சாண்ட்விச் விற்று மாதம் ரூ.25 லட்சம் சம்பாதிக்கும் சாதனையாளர்!
முதல் தொழிலில் ஏற்பட்ட தோல்வியைச் சோர்வுடன் கைவிடாமல், தனது விடாமுயற்சியால் சாண்ட்விச் வியாபாரத்தை மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக நடத்தி மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்த அபிஷேக் சாஹூ என்பவர், தான் மேற்கொண்ட முதல் தொழிலில் கடுமையான தோல்வியைத் சந்தித்தார். இதனால் சுமார் ரூ.30,000 கடனாளி ஆனார். சோர்வடையாமல் யூடியூப் வீடியோக்களைப் பார்த்துப் புதுமையான முறையில் சாண்ட்விச் தயாரிக்கும் ரெசிபிகளைக் கற்றுக்கொண்டார்.
பெரிய முதலீடுகள் ஏதுமின்றி, ஒரு தள்ளுவண்டியில் தனது சாண்ட்விச் கடையைத் தொடங்கினார். அதன் தனித்துவமான சுவையும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற குறைந்த விலையும் மக்கள் மத்தியில் உடனடியாக அமோக வரவேற்பைப் பெற்றது.
மக்களின் பேராதரவால் இவரது சிறிய தள்ளுவண்டி வியாபாரம் தற்போது அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இதன் மூலம் தற்போது இவர் மாதம் சுமார் ரூ.25 லட்சம் வரை வருமானம் ஈட்டி பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்.
