53 ஹார்டு டிஸ்க்குகளைத் திருடி விற்ற ஊழியர் - 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு!

 
மின் ஹார்டு டிஸ்க் மின் ஹார்டு டிஸ்க்

சென்னை மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் கணினிகளில் இருந்த முக்கியத் தரவுகள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகளைத் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர் கோபிநாத் என்பவருக்கு, நீதிமன்றம் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்துச் சிறையிலடைக்க உத்தரவிட்டுள்ளது.

மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் அடுத்தடுத்து கம்ப்யூட்டர்களின் ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போவது குறித்து உயர்தரப்பு அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

மின் ஹார்டு டிஸ்க்

இந்தத் திருட்டுச் சம்பவத்தில் கைதான கோபிநாத், மின்வாரிய அலுவலகத்தில் உள்ள கணினிகளைப் பழுதுபார்க்கும் மற்றும் பராமரிக்கும் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த ஒரு தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர் என்பது தெரியவந்தது. கணினிகளைச் சரிசெய்வது போல நடித்து, உள்ளே இருக்கும் ஹார்டு டிஸ்க்குகளை அவர் ரகசியமாகக் கழற்றித் திருடி வந்துள்ளார்.

முதற்கட்டமாக 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில், கோபிநாத்திடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் அந்தத் திருடப்பட்டப் பொருட்களைக் கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு எடுத்துச் சென்று கள்ளச்சந்தையில் விற்றதை ஒப்புக்கொண்டார்.

செந்தில் பாலாஜி மின்

போலீசாரின் தொடர் விசாரணையில், கோபிநாத் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாகவே இந்தத் தொடர் கைவரிசையைக் காட்டி வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் இந்த ஒரு முறை மட்டும் 18 ஹார்டு டிஸ்க்குகளைத் திருடவில்லை. இதற்கு முன்பாகவே அலுவலகத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்து மேலும் 35 ஹார்டு டிஸ்க்குகளைச் சாதுரியமாகத் திருடி, அவற்றை தலா ₹2,000 வீதம் மொத்தம் ₹70,000-த்திற்கு வெளியில் விற்றுப் பணமாக்கியுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அவரிடமிருந்து திருடப்பட்ட அரசு சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.