2 மகள்களையும் கழுத்தறுத்துக் கொன்ற கொடூரம்... போலீஸூக்குப் போன் போட்டு, வரும் வரை அசையாமல் காத்திருந்த தந்தை!
தன்னுடைய இரண்டு மகள்களையும், மனைவியின் நடத்தை மீதான சந்தேகத்தால், பாத்ரூம் அழைத்து சென்று, கொடூரமாக கழுத்தறுத்துக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சசி ரஞ்சன் மிஸ்ரா (48) என்பவருக்கு ரேஷ்மா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ரித்தி, சித்தி என்ற 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளும் இருந்தனர். ரேஷ்மாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்த சசி ரஞ்சன், வீட்டைச் சிறைக்கூடமாக மாற்றியுள்ளார்.

மனைவியைக் கண்காணிக்க வீட்டிற்குள்ளேயே பல இடங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி ராணுவக் கட்டுப்பாடு விதித்துள்ளார். கடும் மன அழுத்தத்தில் இருந்த சசி ரஞ்சன், தனது மகள்களின் அறைக்குக் கூட மனைவியைச் செல்ல விடாமல் தடுத்துத் தனிமைப்படுத்தியுள்ளார்.
நேற்று முன் தினம் இரவு தனது மகள்களுடன் ஒரே அறையில் தூங்கிக் கொண்டிருந்த சசி ரஞ்சன், அதிகாலை 2.30 மணியளவில் திடீரென ஆக்ரோஷமடைந்துள்ளார். வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பிஞ்சு குழந்தைகள் ரித்தி மற்றும் சித்தி ஆகியோரின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

கொலையைச் செய்துவிட்டுச் சிறிதும் பதற்றமின்றி, சசி ரஞ்சனே காவல்துறையைத் தொடர்பு கொண்டு, "என் மகள்களைக் கொன்றுவிட்டேன், வந்து என்னைக் கைது செய்யுங்கள்" எனக் கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தைகளின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது சசி ரஞ்சனை கைது செய்துள்ள போலீசார், அவர் திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்தாரா அல்லது மனநிலை பாதிப்பால் செய்தாரா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
