பெங்களூரில் 2 மகள்களைக் கொன்று தந்தை தற்கொலை முயற்சி!

 
தற்கொலை

பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனது 2 பெண் குழந்தைகளைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டுத் தந்தையும் தற்கொலைக்கு முயன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு பிலால் நகரைச் சேர்ந்த எஸ்.ஜி. இம்ரான் (40), தனியார் டாக்ஸி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். தனது மகள்களான ஷேக் ஜோயா (10) மற்றும் ஷேக் ஜெஹ்ரா (5) ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டுKempegowda சர்வதேச விமான நிலையம் அருகிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். அங்கு 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் இம்ரானும் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஹோட்டல் ஊழியர்கள் அறையைத் திறந்து பார்த்தபோது குழந்தைகள் உயிரிழந்து கிடந்ததும், இம்ரான் சுயநினைவின்றி ரத்த வெள்ளத்தில் கிடந்ததும் தெரியவந்தது. உடனடியாக மீட்கப்பட்ட இம்ரான், மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவ இடத்தில் காவல்துறையினர் கைப்பற்றிய கடிதத்தில், தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் இருந்ததாகவும், குடும்பத் தகராறு மற்றும் மனைவியின் கள்ளக்காதல் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகவும் இம்ரான் எழுதியிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பெங்களூரு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.