3 மாத கர்ப்பிணி மனைவியை கொன்றுவிட்டு, 3 நாட்களாக சடலத்துடன் வசித்த கணவன் தற்கொலை!
திருப்பூரில் குடும்பத் தகராறு காரணமாக 3 மாத கர்ப்பிணியான தனது காதல் மனைவியைப் பூரிக்கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு, வீட்டைப் பூட்டிக்கொண்டு 3 நாட்களாகச் சடலத்துடன் வசித்து வந்த கணவன், வீட்டின் மற்றொரு அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த சரவணக்குமார் (27) என்பவரும், ஸ்ரீமதி (19) என்ற இளம்பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரீமதி தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், சரவணக்குமார் சரிவர வேலைக்குச் செல்ல மறுத்ததாலும், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட தேவையற்ற சந்தேகத்தினாலும் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த சரவணக்குமார் சமையலறையில் இருந்த பூரிக்கட்டையை எடுத்து ஸ்ரீமதியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்ரீமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை செய்த பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த சரவணக்குமார், வீட்டை விட்டு வெளியே ஓடாமல், கடந்த 3 நாட்களாகத் தனது மனைவியின் சடலம் இருந்த வீட்டிலேயே தங்கியுள்ளார். 3 நாட்கள் கடந்த நிலையில், கோடை வெப்பம் காரணமாக ஸ்ரீமதியின் சடலம் முற்றிலும் அழுகி, வீட்டைச் சுற்றி அக்கம் பக்கத்தினருக்குத் தெரியும் வகையில் கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் விபரம் வெளியே தெரிந்து போலீசார் தம்மைக் கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில், சரவணக்குமார் வீட்டின் மற்றொரு அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்" எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவது குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அழுகிய நிலையில் கிடந்த ஸ்ரீமதியின் சடலத்தையும், தூக்கில் தொங்கிய சரவணக்குமாரின் உடலையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
