பெற்ற மகளை 2வது மனைவியுடன் சேர்ந்து கொலை செய்த தந்தை... பகீர் பிண்ணனி!
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில் சொந்த மகளை கொலை செய்த தந்தைக்கும், கொலைக்கு உடந்தையாக இருந்த சித்திக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கடந்த2024ம் ஆண்டு நடந்த இந்த கொடூர கொலை வழக்கில், இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற சட்டப்போராட்டத்துக்கு தீர்ப்பு கிடைத்துள்ளது. உயிரிழந்த சிறுமி ஸ்வேதாவுக்கு நீதி கிடைத்திருப்பதாக அவரது குடும்பத்தினரும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.

கோண்டா பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது சொந்த மகள் ஸ்வேதாவை கடந்த 2024ம் ஆண்டு கொடூரமாக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த கொலையில் ராஜேஷின் இரண்டாவது மனைவியும், சிறுமியின் சித்தியுமான கிரணும் அவருக்கு முழுமையாக உடந்தையாக இருந்ததாகக் கூறப்பட்டது. பேத்தியின் மரணத்தை அறிந்த தாய்வழி தாத்தா, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், ராஜேஷ் மற்றும் கிரண் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து பெற்ற மகளை கொலை செய்த ராஜேஷுக்கும், அதற்கு உடந்தையாக இருந்த கிரணுக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இரண்டு ஆண்டுகளாக நடந்த இந்த சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், ஸ்வேதாவின் குடும்பத்தினர் இந்த தீர்ப்பை ஏற்று வரவேற்றுள்ளனர்.
