மனைவியைக் கல்தூணில் மோதிக் கொன்ற கணவன்.. சிவகங்கையில் பயங்கரம்!
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கல்தூணில் மோதிக் கொடூரமாகக் கொலை செய்த கணவன், காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (37). இவருக்கும் உய்யவந்தாள் (40) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. வழக்கம்போல் நேற்றும் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், மனைவி உய்யவந்தாளைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். தொடர்ந்து அவரை தரதரவென இழுத்துச் சென்றபோது, வீட்டின் அருகில் இருந்த கல்தூணில் உய்யவந்தாளின் தலை பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த தலாய்காயம் அடைந்த உய்யவந்தாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரகாஷ், உடனடியாகக் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். இச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பிரகாஷை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
