ஏற்கெனவே 3 திருமணங்களானதை மறைத்து, காதலித்து ஏமாற்றிய மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்!
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த கணவன் காவல்துறையில் சரணடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் எரியோடு பகுதியைச் சேர்ந்தவர் சுவேதா (24). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (28) என்பவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமணம் செய்து கொள்ளும்போது தமக்கு வேறு உறவுகள் யாரும் இல்லை என்றும், தான் தனித்து இருப்பதாகவும் சுவேதா பொய்யாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், சுவேதாவிற்கு ஏற்கனவே மூன்று முறை திருமணம் நடந்துள்ள விவகாரம் கணவர் அஜித்குமாருக்குத் தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை மறைத்துத் தன்னை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டதை அறிந்த அஜித்குமார், மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது சுவேதாவின் செல்போனை அஜித்குமார் பார்வையிட்டபோது, அதுதொடர்பாகப் பிரச்சினை எழுந்துள்ளது. இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரத்தின் உச்சத்திற்குக் சென்ற அஜித்குமார், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுவேதாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலைச் சம்பவத்திற்குப் பிறகு அங்கிருந்து தப்பியோட முயலாத அஜித்குமார், நேராக எரியோடு காவல் நிலையத்திற்குச் சென்று தன் மனைவியை வெட்டிக் கொன்றதாகக் கூறி அதிகாரிகளிடம் சரணடைந்தார்.

காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிக் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கணவன் அஜித்குமாரை அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
