கள்ளக்காதல் தகராறில் அண்ணனுடன் சேர்ந்து மனைவியைக் கொன்ற கணவன் - ராஜப்பாளையத்தில் பரபரப்பு!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே, கணவருடன் ஏற்பட்ட தகராறில் பிரிந்து வாழ்ந்த மனைவியை, அவரது கணவரும் அண்ணனும் சேர்ந்து கத்தியால் குத்திக் கொன்ற கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன்புத்தூர் பகுதியைச் சேர்ந்த பூமிராஜாவுக்கும் (39), செல்வராணிக்கும் (35) திருமணம் நடைபெற்று இரண்டு மகள்கள் உள்ளனர். பூமிராஜா வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால், அதைக் கண்டித்த செல்வராணி கணவரைப் பிரிந்து மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மனைவியைத் தொடர்ந்து சேர்ந்து வாழுமாறு பூமிராஜா குடும்பத்தினர் தொல்லை கொடுத்து வந்த நிலையில், இதுகுறித்து செல்வராணி சேத்தூர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார். கடந்த முன்தினம் இரவு செல்வராணி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பூமிராஜாவும் அவரது அண்ணன் ஐயப்பனும் சேர்ந்து வழியை மறித்துத் தகராறு செய்துள்ளனர். பூமிராஜா மனைவியைப் பிடித்துக்கொள்ள, ஐயப்பன் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைச் சராமாரியாகக் குத்தியுள்ளார்.

படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே செல்வராணி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த பூமிராஜா மற்றும் ஐயப்பன் ஆகிய இருவரையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
