நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்... மரண வாக்குமூலத்தால் அம்பலம்!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சின்னசெவலை கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரைப் படுகொலை செய்த கணவனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சின்னசெவலை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (42), ஓட்டுநரான இவரது மனைவி ரேணுகா (36). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாகத் தனது மனைவியின் நடத்தையில் கோவிந்தனுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கோவிந்தனுடன் வாழ விருப்பமில்லாத ரேணுகா, இது குறித்துத் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, அதே கிராமத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் ரேணுகா தனது வீட்டின் அருகே உள்ள முள்தோப்பிற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கோவிந்தன், ரேணுகாவை வழிமறித்துத் தான் வைத்திருந்த கத்தியால் அவரது தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ரேணுகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், கோவிந்தன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரேணுகாவை மீட்டுத் திருவெண்ணெய்நல்லூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில் இன்று அதே பகுதியில் மறைந்திருந்த கோவிந்தனைப் போலீசார் கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
