மனைவி, தங்கையைக் கொன்று வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்... 3 பேரைக் பலிவாங்கிய அதிர்ச்சி!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் எஸ்பிஐ வங்கி ஊழியர் ஒருவர், தனது வங்கி மேலாளர் மனைவியையும் தனது சகோதரியையும் சுட்டுக் கொன்று விட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ கோமதி நகரில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் உதவி மேலாளரான திவ்யா மிஸ்ரா என்பவர், நேற்று காலை 11:22 மணியளவில் வங்கிக்கு வெளியே, அவரது கணவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் காயமடைந்த திவ்யா உடனடியாக மீட்கப்பட்டு ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிசெய்தனர். இவர் பிரபல பத்திரிகையாளரும் யூடியூபருமான பிரக்யா மிஸ்ராவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த போலீசாரின் விசாரணையில் தம்பதியிடையே நீண்டநாட்களாகக் குடும்பத் தகராறு நிலவி வந்ததும், சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு திவ்யா தொடர்ந்த விவாகரத்து வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.
மனைவியைச் சுட்டுக் கொன்ற பிறகு, ஹுசதியாவில் உள்ள தனது வீட்டிற்குத் தப்பிச் சென்ற கணவர் மனஸ் பாஜ்பாய், அங்கிருந்த தனது சொந்த சகோதரி விபா பாஜ்பாயையும் சுட்டுக் கொன்று விட்டுத் தானும் தற்கொலை செய்து, உயிரிழந்தார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக மனஸ் பாஜ்பாய் தனது வாட்ஸ்அப்பில் வைத்துள்ள ஸ்டேட்டஸில், "என் மனைவி எனக்குத் துரோகம் செய்ததால் அவளைக் கொன்று விட்டேன்... இப்போது என்னையும் என் சகோதரியையும் கொல்லப் போகிறேன்... அவளுடைய சகோதரி பிரக்யாவுக்கும், பரத்துக்கும் எல்லாம் தெரியும்" என்று பதிவிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள லக்னோ காவல்துறையினர், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
