காதலியின் குழந்தையை தரையில் அடித்துக் கொன்றவனுக்கு மரண தண்டனை - 40 நாட்களில் அதிரடி தீர்ப்பு!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 18 மாதக் குழந்தை ஆரவ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விராஜ் என்ற வாலிபர், பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள அவர் திட்டமிட்டிருந்த நிலையில், பெண்ணின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த 18 மாதக் குழந்தை ஆரவ் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக விராஜ் கருதியுள்ளார்.
இதன் காரணமாக, கடந்த மே 30-ஆம் தேதி அந்தக் குழந்தையைக் கொடூரமான முறையில் தூக்கித் தரையில் அடித்துக் கொலை செய்தார். இந்த நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், அம்மாநிலக் காவல்துறை மற்றும் நீதிமன்றம் மிகத் தீவிரமாகச் செயல்பட்டன. சம்பவம் நடந்த வெறும் 6 நாட்களுக்குள் காவல்துறை விசாரணையை முழுமையாக முடித்து, நீதிமன்றத்தில் வலுவான ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
வழக்கு விசாரணையைத் தினசரி அடிப்படையில் விரைவாக மேற்கொண்ட நீதிமன்றம், சம்பவம் நடந்த 40 நாட்களுக்குள் அனைத்துத் தரப்பு வாதங்களையும் நிறைவு செய்தது. காதலித்த பெண்ணைத் திருமணம் செய்யக் குழந்தையைக் கொடூரமாகக் கொன்ற விராஜின் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இந்தத் தீர்ப்பு ஒரு மிகச்சிறந்த பாடமாகவும், விரைவு நீதிக்கான உதாரணமாகவும் அமைந்துள்ளது எனச் சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
