கணவர் கண்முன்னே மனைவியிடம் 7 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு; பைக் கவிழ்ந்து குழந்தை உட்பட 3 பேர் காயம்!

 
மனைவியின் டார்ச்சர் தாங்கல… செயின் பறிப்பில் ஈடுபட்ட புதுமாப்பிள்ளை!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர் கணவர் கண்முன்னே மனைவியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற துணிகரச் சம்பவம் பாறசாலை அருகே அரங்கேறியுள்ளது. நகையைப் பறித்த வேகத்தில் நிலைதடுமாறி பைக் கவிழ்ந்ததில் குழந்தை உட்பட மூவரும் காயமடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி அனிஷா. இவர்களது மகள் ஆஸ்னா. தம்பதியினரின் மகள் ஆஸ்னா திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவவருக்குத் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக, குமார் தனது மனைவி மற்றும் மகளைத் தனது மோட்டார் சைக்கிளில் அமர வைத்துக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

செயின் பறிப்பு கொள்ளை

இவர்களது பைக் கேரளா-தமிழக எல்லையான பாறசாலை அருகே சென்று கொண்டிருந்த போது, இவர்களைத் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், திடீரெனப் பைக்கின் அருகே வந்து அனிஷாவின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப்  பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். மர்ம நபர் சங்கிலியைப் பறித்த அதிர்ச்சியில் அனிஷா மரண பயத்தில் சத்தமிட்டுக் கூச்சலிட்டுள்ளார்.

மனைவியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குமார், பைக்கைக் கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் வேகமாகக் சென்ற பைக் நிலைதடுமாறிச் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குமார், அனிஷா மற்றும் உடல்நிலை சரியில்லாத அவர்களது மகள் ஆஸ்னா ஆகிய மூவரும் பைக்கிலிருந்து கீழே விழுந்து லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

செயின் பறிப்பு

காயமடைந்த மூவருக்கும் அருகில் இருந்தவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடனடியாகப் பாறசாலை காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சட்டம்-ஒழுங்கு போலீசார் விபத்து நடந்த பகுதியைப் பார்வையிட்டனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி, தப்பி ஓடிய மர்ம நபர் யார் என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக-கேரள எல்லைப் பகுதி என்பதால் எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் இருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுத் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் கணவர் கண்முன்னே நிகழ்ந்த இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பயத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.