யூடியூப் பார்த்து தங்கம் எடுக்கும் ஆசையில் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்ட வாலிபர் – ஆந்திராவில் விபரீதம்!

 
மலையேற்றம் தங்கச்சுரங்கம்

ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராமகிரி மலையில் தங்கம் இருப்பதாகச் சமூக வலைதளமான யூடியூப்பில் வெளியான வீடியோக்களைப் பார்த்த வாலிபர் ஒருவர், தானும் தங்கம் எடுக்கும் பேராசையில் நள்ளிரவில் ஆபத்தான முறையில் சுரங்கத்திற்குள் இறங்கித் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காற்று மற்றும் வெளிச்சம் இல்லாததால் மூச்சுதிணறி அவதிப்பட்ட அந்த இளைஞரை, காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் இணைந்து நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டனர்.

ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டம் ராமகிரி மலைப் பகுதியில் தங்கச் சுரங்கங்கள் மற்றும் தங்கம் இருக்கும் இடங்கள் குறித்த சில மர்மமான தகவல்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளன. இதைக் கண்ட வாலிபரான பிரபாகர் ரெட்டி என்பவருக்கு, எப்படியாவது தானும் அந்த மலையிலிருந்து தங்கம் எடுத்துவிட வேண்டும் என்ற தீராத ஆசை ஏற்பட்டுள்ளது.

தங்க சுரங்கம்

இதன் ஒரு பகுதியாக தனது நண்பருடன் நள்ளிரவு நேரத்தில் ராமகிரி மலைப் பகுதிக்குச் சென்றுள்ளார். யூடியூப்பில் பார்த்த வழிமுறைகளைப் பின்பற்றி, அங்குள்ள பழைய, கைவிடப்பட்ட சுரங்கத்திற்குள் கயிற்றைக் கட்டிக்கொண்டு பிரபாகர் ரெட்டி கீழே இறங்கியுள்ளார். சுரங்கத்திற்குள் போதிய வெளிச்சமோ சுத்தமான காற்றோ இல்லாத காரணத்தாலும், பாதைகள் ஆபத்தான முறையில் அமைந்திருந்ததாலும் பிரபாகர் ரெட்டியால் வெளியே வர முடியாமல் உள்ளேயே மாட்டிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர், உடனடியாகக் காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறைக்கும் அவசரத் தகவல் அளித்தார்.

தகவலறிந்ததும் உடனடியாக ராமகிரி காவல் துறையினரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் சுரங்கத்திற்குள் இறங்கிப் பிரபாகர் ரெட்டியைப் பத்திரமாக வெளியே மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அவருக்குப் பெரிய அளவிலான காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்.

 மாலி தங்க சுரங்கம்

இதனைத் தொடர்ந்து, இது போன்ற ஆபத்தான மற்றும் சட்டவிரோதமான செயல்களில் எதிர்காலத்தில் எக்காரணம் கொண்டும் ஈடுபடக் கூடாது என எச்சரித்த காவல்துறையினர், இருவரையும் கடுமையான அறிவுரைகளுடன் பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர். இணையத்தில் வரும் தகவல்களை கண்மூடித்தனமாக நம்பி உயிரைப் பணயம் வைக்கும் இத்தகைய செயல்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.