லிவ்-இன் காதலியைக் கொன்று வீட்டுத் தோட்டத்தில் புதைத்த வாலிபர் தலைமறைவு!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தங்கி வாழ்ந்து வந்த லிவ்-இன் ஜோடியில், காதலியை கொலை செய்து வீட்டுத் தோட்டத்தில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 32 வயதான கிரண் என்ற பெண்ணும், 22 வயதான பர்வேஷ் என்ற இளைஞரும் ஜெய்ப்பூரில் வாடகை வீட்டில் கடந்த 2 மாதங்களாக லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். அக்கம்பக்கத்தினரிடம் தங்களை கணவன்-மனைவி என்றே அவர்கள் கூறி வந்துள்ளனர்.

வீட்டின் உரிமையாளர் அவர்களைப் பார்க்கச் சென்றபோது வீடு பூட்டப்பட்டுக் கிடந்துள்ளது. அப்போது வீட்டின் தோட்டத்தில் புதியதாக மண் தோண்டப்பட்டுக் கிடந்ததையும், ஒரு பெண்ணின் கை மண்ணுக்குள் இருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார்.
விரைந்து வந்த காவல்துறையினர் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த கிரணின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கிரணை கொலை செய்துவிட்டு உடலைத் தோட்டத்தில் புதைத்துவிட்டுத் தலைமறைவாகியுள்ள பர்வேஷைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
