ராமாயண நாடகத்தில் அனுமன் வேடமிட்டவர் மேடையில் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ராமாயண நாடகத்தில் அனுமன் வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்த 38 வயது நாடக நடிகர் மிதுன் பிரதான், மேடையிலேயே திடீரென மயங்கிச் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், உயிரிழந்த நடிகரின் குடும்பத்திற்குச் செஞ்சிலுவைச் சங்க நிதியிலிருந்து ரூ.30,000 நிதியுதவி வழங்க நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஒடிசாவில் நடைபெற்ற ராமாயண நாடக நிகழ்ச்சியில் மிதுன் பிரதான் (38) அனுமன் வேடமேற்று நடித்துக் கொண்டிருந்தார். பார்வையாளர்கள் முன்னிலையில் நாடகம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அவர் திடீரென நெஞ்சைப் பிடித்தபடி மேடையிலேயே மயங்கிச் சுருண்டு விழுந்தார்.

சக கலைஞர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், உயிரிழந்த மிதுன் பிரதானின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடகக் கலைஞர் மிதுன் பிரதானின் திடீர் மறைவுக்கு அப்பகுதி மக்களும் கலைஞர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், உயிரிழந்த நடிகரின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில் செஞ்சிலுவைச் சங்க (Red Cross) நிதியிலிருந்து ரூ.30,000 நிதியுதவி வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
