பிரபல ரவுடி வெட்டி படுகொலை... அடுத்தடுத்து அரங்கேறும் பழிக்குப் பழி கொடூரங்கள் !

 
மணலி மணலி

சென்னை மணலி புதுநகர் அருகே உள்ள விச்சூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது வாலிபர் விஜயகுமார். பிரபல ரவுடியான இவர் மீது ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், இன்று காலை விச்சூர் சாலையில் அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த சதி கும்பல் இவரை வழிமறித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளது.

ஆம்புலன்ஸ்

அங்கிருந்து தப்பியோட முயன்ற விஜயகுமாரை அந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் மார்பு மற்றும் தலைப்பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த மணலி புதுநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு கஞ்சா வியாபாரம் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் மூன்று பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இவர் முக்கியக் குற்றவாளியாக இருந்து ஜாமீனில் வெளிவந்தவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் காரணமாக ஏற்பட்ட பழிக்குப்பழி வாங்கும் சதிச் செயலே தற்போதைய இந்தத் தாக்குதலுக்கு முக்கியக் காரணம் எனப் போலீசார் கருதுகின்றனர். மணலி புதுநகர் பகுதியில் 14 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடந்துள்ளதால் அப்பகுதி மக்கள் தற்போதும் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.