அரை கி.மீ. தூரத்துக்கு உயிருடன் கரை ஒதுங்கிய ஆயிரக்கணக்கான சாளை மீன்கள்... பைகளில் அள்ளிச் சென்ற பொதுமக்கள்!
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரையில் ஆயிரக்கணக்கான சாளை மீன்கள் உயிருடன் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குலசேகரன்பட்டினம் அருகே உள்ள மணப்பாடு கடற்கரையில், சவேரியார் வாழ்ந்த குகைப் பகுதியிலிருந்து வடக்குப் புறமாக சுமார் அரை கிலோமீட்டர் தூரத்துக்கு சாளை மீன்கள் கூட்டம் கூட்டமாகக் கரை ஒதுங்கின. இதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் நாட்டுப்படகுகளில் சென்று கூடைகளில் மீன்களைச் சேகரித்தனர்.
கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் இந்த அரிய நிகழ்வைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். அவர்களும் பிளாஸ்டிக் பைகளில் மீன்களை அள்ளிச் சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மணப்பாடு கடல் பகுதியில் நீரோட்ட மாற்றம் காரணமாக மணல் திட்டுகள் அதிகரித்து வருவதாகவும், கடலில் கூட்டமாகச் சென்ற சாளை மீன்கள் நீரோட்டத்தின் காரணமாகக் கரைக்கு வந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
எனினும், மீன்கள் இவ்வாறு பெருமளவில் கரை ஒதுங்கியதற்கான காரணம் உறுதியாகத் தெரியவில்லை. இதுகுறித்து கடல் நீரோட்ட மாற்றங்களை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
