செல்போனில் பேசியதால் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர் !
மாங்காடு அருகே செல்போனில் நீண்ட நேரம் ஆண் நண்பருடன் பேசியதாக ஏற்பட்ட தகராறில், மனைவியை இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டிக்கொலை செய்ததாக கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.மாங்காடு அருகே வசித்து வந்தவர் முஜைதீன் (30). இவரது மனைவி சோபியா (26). இருவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில், 7 வயதில் மகன் உள்ளார்.

சோபியா நீண்ட நேரம் செல்போனில் ஆண் நண்பருடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை முஜைதீன் கண்டித்ததாகவும், இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், சம்பவத்தன்று மீண்டும் செல்போன் பயன்பாடு தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முஜைதீன், இறைச்சி வெட்ட பயன்படுத்தும் கத்தியால் சோபியாவை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.இதில் படுகாயமடைந்த சோபியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது. மனைவியை கொலை செய்த பின்னர் முஜைதீன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், தலைமறைவாக இருந்த முஜைதீனை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் மனைவி கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் பயன்பாடு தொடர்பான குடும்பத் தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
