பொதுமக்களே உஷார்... ரசாயனம் கலந்த பளபளக்கும் மாம்பழங்கள் ... பகீர் வீடியோ!

 
மாம்பழம் மாம்பழம்

கோடைக்காலம் தொடங்கி மாம்பழங்களின் வரத்து அதிகரித்துள்ள நிலையில், சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பளபளப்பான மாம்பழங்கள் உயிருக்கு ஆபத்தானவை என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. நவி மும்பையில் உள்ள புகழ்பெற்ற சந்தையில், விழிப்புணர்வுள்ள குடிமகன் ஒருவர் நடத்திய ரகசிய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், மாம்பழங்களை விரைவாகப் பழுக்க வைக்கவும், அவை மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கவும் 'கால்சியம் கார்பைடு' மற்றும் சில தடை செய்யப்பட்ட நச்சு ரசாயனங்களைத் தொழிலாளர்கள் தெளிப்பது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது.

ரசாயனம் கலந்த மாம்பழங்களை உண்பதால் தலைவலி, தலைசுற்றல், வாந்தி மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட கால அடிப்படையில் இது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தைச் சிதைப்பதோடு, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் 100 சதவீதம் அதிகரிக்கிறது. குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்கள் பழங்களை வாங்கும் போது அதன் நிறம் மற்றும் மணத்தை வைத்து அவற்றின் தரத்தைச் சோதித்து வாங்குவது அவசியமாகும்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வாஷி சந்தையில் தீவிர ஆய்வு நடத்தி மாம்பழ மாதிரிகளைச் சேகரித்துள்ளனர். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய விதிகளின்படி, ரசாயனம் மூலம் பழங்களைப் பழுக்க வைத்து விற்பது கடும் குற்றமாகும். பொதுமக்கள் மாம்பழங்களை வாங்கியவுடன் அப்படியே சாப்பிடாமல், குறைந்தது 1 மணி நேரமாவது தண்ணீரில் நன்கு ஊறவைத்துக் கழுவிப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.