மணிப்பூரில் மீண்டும் வன்முறை.. 24 மணி நேரத்தில் 9 பேர் பலி; 14 வீடுகள் தீக்கிரை
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி–நாகா சமூகங்களுக்கு இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு மற்றும் பதுங்கித் தாக்குதல் சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், குறைந்தது 14 வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால் மாநிலத்தின் மலை மாவட்டங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது.
மணிப்பூரின் காம்ஜோங், உக்ருல், காங்போக்பி உள்ளிட்ட மாவட்டங்களில் வெவ்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. காம்ஜோங் மாவட்டத்தில் நாகா கிராமக் காவலர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும், காங்போக்பி மாவட்டத்தில் நடத்தப்பட்ட பதுங்கித் தாக்குதலில் நாகா தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
உக்ருல் மாவட்டத்தில் காரில் சென்ற சந்தீப் ராய் என்பவரும் ஆயுதம் ஏந்திய நபர்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதர உயிரிழப்புகள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. சம்பவங்கள் தொடர்பாகப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து அதிகரிக்கும் வன்முறையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, காம்ஜோங் மாவட்டத்தின் சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காங்போக்பி மாவட்டத்தில் முழு அடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் கடந்த காலங்களில் ஏற்பட்ட இன மோதல்களுக்குப் பிறகு, அவ்வப்போது மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வது கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சம்பவங்களின் பின்னணி மற்றும் தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
