மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடிப்பு! பெண் உட்பட 4 பேர் பலி; வீடுகள் தீக்கிரை... பகீர் வீடியோ!

 
மணிப்பூர் என்கவுண்டர் பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படை சுட்டுக்கொலை

 

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காம்ஜோங் மாவட்டத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் மோதல் சம்பவங்களில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பலர் காயமடைந்துள்ளனர். வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

காம்ஜோங் மாவட்டத்தின் சாசாத் (Chassad) பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து வன்முறை தீவிரமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் டோம்கோனேய் டவுதாங் (Domkhonei Touthang) என்ற பெண் துப்பாக்கிக் காயமடைந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஆயுதக் குழுக்களுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதாகவும், அதில் மூன்று சந்தேகிக்கப்படும் ஆயுதக் குழு உறுப்பினர்கள் உயிரிழந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வன்முறையின்போது 10-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், சாசாத் பகுதியில் குறிப்பிட்ட இடத்தைச் சுற்றி மக்கள் கூடுவதற்குத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூரில் ஏற்கெனவே பல்வேறு சமூகங்களுக்கு இடையே நீடித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், இந்தப் புதிய வன்முறைச் சம்பவம் அங்கு மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.