மணிப்பூரில் மீண்டும் மோதல்... துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் ரத்த வெள்ளத்தில் பலி!
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் இன்று பயங்கர வன்முறை வெடித்தது. அந்த மாவட்டத்தின் முல்லம் கிராமத்தில் இரு குறிப்பிட்ட குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், சிறிது நேரத்தில் ஆயுத மோதலாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குறிவைத்துத் தாக்கித் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.

ஆயுதக் குழுக்களிடையே நடந்த இந்தத் தீவிர துப்பாக்கிச் சண்டையில், குண்டுகள் பாய்ந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இந்தத் தகவல் காட்டுத்தீ போல பரவியதைத் தொடர்ந்து மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் பதற்றம் அதிகரித்துள்ளது. வன்முறை மேலும் பரவாமல் தடுக்க கூடுதல் பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், வன்முறையில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை பாதித்த இடங்களில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
