மணிப்பூரின் மிக இளம் வயது கலெக்டர்... தஞ்சாவூர் தமிழ்ப் பெண் ஏஞ்சலின் சாதனை!
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான ஏஞ்சலின் ரெனிட்டா, மணிப்பூர் மாநிலத்தின் காக்சிங் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று, அம்மாநிலத்தின் மிக இளம் வயது மாவட்ட ஆட்சியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியைச் சேர்ந்த இவர், தனது பள்ளிப் படிப்பைத் தமிழ் வழியிலேயே கற்றுத் தேர்ந்தார். கடின உழைப்பால் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வில், தனது முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 338-வது இடம் பிடித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியானார்.

மணிப்பூர் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியைத் தொடங்கிய இவர், அங்குப் பல்வேறு முக்கியத் துறைகளிலும், சவாலான பொறுப்புகளிலும் திறம்படச் பணியாற்றித் தனது நிர்வாகத் திறமையை நிருபித்துள்ளார்.
இவரது சிறப்பான பணியைப் பாராட்டும் வகையிலும், நிர்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கிலும் 28 வயதேயான இவருக்குக் காக்சிங் மாவட்ட ஆட்சியர் பொறுப்பை வழங்கி மணிப்பூர் அரசு கவுரவித்துள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் மிக இளம் வயதில் கலெக்டரான அதிகாரி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
