விவசாயிகள் அதிர்ச்சி... திடீரென சரிந்த மஞ்சள் விலை!
ஈரோடு மஞ்சள் சந்தையில் கடந்த மாதம் வரை உச்சத்தில் இருந்த மஞ்சளின் விலை தற்போது கணிசமாகக் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் 19,779 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் தற்போது சந்தை நிலவரப்படி அதன் விலையில் 2,000 ரூபாய் வரை திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் விலை வீழ்ச்சி காரணமாக மஞ்சள் சாகுபடி செய்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

விலை குறைவுக்கான காரணங்கள் குறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் சங்க நிர்வாகிகள் விரிவான விளக்கமளித்துள்ளனர். கடந்த மாதத்தில் சந்தைக்கு மஞ்சள் வரத்து குறைவாக இருந்ததும், அதே நேரத்தில் தேவைகள் அதிகமாக இருந்ததும் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ஆனால் தற்போது தேசிய அளவில் உள்ள அனைத்து முக்கியச் சந்தைகளிலும் மஞ்சளின் வரத்து பெருமளவில் அதிகரித்துள்ளது.

இதனால் சந்தையில் மஞ்சளின் விலை படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.நேற்றைய சந்தை நிலவரப்படி விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் 11,329 ரூபாய் முதல் 18,311 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல கிழங்கு மஞ்சள் ரகம் ஒரு குவிண்டால் 10,869 ரூபாய் முதல் 16,616 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையானது. சந்தைக்கு புதிய வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் விலை மேலும் மாறக்கூடும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
