தருமபுரி வனப்பகுதியில் ஆண் சடலம் மீட்பு - போலீசார் தீவிர விசாரணை!
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கவரமலை வனப்பகுதியில் முற்றிலும் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த கவரமலை வனப்பகுதியில் இன்று வனத்துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, வனக்காப்பாளர்கள் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அங்குள்ள மரக்கிளையில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதைக் கண்ட வனத்துறையினர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடல் முற்றிலும் அழுகிச் சிதைந்த நிலையில் காணப்பட்டதால், உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் உடனடியாகத் தெரியவரவில்லை.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
