'ஓம் சரவண பவ’ மந்திரமும், ஆடி கிருத்திகை விரத முறையும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?!

 
முருகன் முருகர் ஆடிக்கிருத்திகை கந்தன் முருகா

முருகப்பெருமானுக்கு உகந்த முக்கிய விரத நாட்களில் ஆடி கிருத்திகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதற்கான வழிமுறைகளையும், விரத முறைகளையும் தெரிஞ்சுக்கலாம். விரதம் மேற்கொள்பவர்கள் ஆடி கிருத்திகைக்கு முந்தைய நாள் இரவே எளிமையான, சாத்வீகமான உணவை உட்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் நாள் முழுவதும் தண்ணீர் மட்டும் அருந்தி முழு உபவாசமாக இருக்கலாம். முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள், இளநீர் அல்லது பழச்சாறுகளை மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம்.

முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைவு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் வெங்காயம், பூண்டு சேர்க்காத சாத்வீக உணவை உண்டு, மற்ற நேரங்களில் திரவ உணவுகளை உட்கொள்ளலாம்.

பழனி முருகன் முருகர்

அதிகாலையிலேயே (பிரம்ம முகூர்த்தத்தில்) எழுந்து நீராடி, பூஜையறையைச் சுத்தம் செய்து முருகப்பெருமான் படம் அல்லது வேலுக்குத் தீபமேற்ற வேண்டும். முருகனுக்கு உகந்த சிவப்பு நிற மலர்களான அரளி, செவ்வரளி அல்லது முல்லை, செவ்வந்தி மலர்களால் அர்ச்சனை செய்யலாம். ”ஓம் சரவணபவ” அல்லது “ஓம் சரவணபவ நமஹ” என்ற ஆறெழுத்து மந்திரத்தை 108 முறை ஜெபிப்பது மிகுந்த நன்மைகளைத் தரும். சர்க்கரை பொங்கல், தினை மாவு, பஞ்சாமிர்தம் அல்லது காய்ச்சிய பாலை நைவேத்தியமாகப் படைக்கலாம்.

முருகன் முருகர் சஷ்டி

மாலை வேளையில் அருகில் உள்ள முருகப்பெருமான் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்வதும், கந்த சஷ்டி கவசம் மற்றும் திருப்புகழ் பாடல்களைப் பாடுவதும் சிறந்தது. கோவில் தரிசனம் முடித்த பிறகோ அல்லது வீட்டில் மாலை தீபாராதனை காட்டிய பிறகோ, முருகனுக்குப் படைத்த பிரசாதத்தை உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.