மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லத் தடை... பெரும் பரபரப்பு !

 
marina

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமையைக் கோரியும் டெல்லியில் இளைஞர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களால் அங்குப் பதற்றமான சூழல் நிலவுகிறது. டெல்லியைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், தமிழகத்திலும் இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மெரினாவில் ஒன்று கூடிப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் முன் எச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரினா

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள அனைத்து நுழைவுப் பாதைகளும் முற்றிலும் மூடப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகள் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரைக்கு வரும் பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் எச்சரித்து அங்கிருந்து காவல் துறையினர் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பி வைக்கின்றனர். சென்னை மெரினா மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கியச் சாலைகளில் ரோந்துப் பணிகளும் அதிகரிக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மெரினா கடற்கரை பார்க்கிங்

முன்னதாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் பேரணியைக் கலைத்தனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்துத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தலைநகர் சென்னையில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க முக்கிய இடங்களில் கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.