திருமண மோசடி.. புகாரளித்த மனைவி மீது கணவன் கொடூரத் தாக்குதல்!
சென்னையில் திருமண மோசடி மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாகப் புகார் அளித்த பெண் ஒருவரை, அவரது கணவர் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், தனது கணவர் மகேஷ் கண்ணா என்பவர் தன்னை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டதாகவும், திருமணத்திற்குப் பிறகு தன்னை பாலியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும் சென்னை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மனைவியின் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததையடுத்து, மகேஷ் கண்ணா நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றார்.

முன்ஜாமீனில் வெளியே வந்த மகேஷ் கண்ணா, புகாரைத் திரும்பப் பெறுமாறு தனது மனைவியை மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அந்தப் பெண் மீது அவர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளார். கணவரின் தாக்குதலால் காயமடைந்த அந்தப் பெண், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். "முன்ஜாமீனில் இருக்கும் போதே கணவர் என்னைக் கொலை செய்ய முயல்கிறார், எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என அவர் காவல்துறையிடம் மீண்டும் முறையிட்டுள்ளார்.
முன்ஜாமீன் நிபந்தனைகளை மீறித் தாக்குதலில் ஈடுபட்டதால், மகேஷ் கண்ணாவின் முன்ஜாமீனை ரத்து செய்யக் காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர். மேலும், கொலை முயற்சி உள்ளிட்ட கூடுதல் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
