கல்யாண 'ரிட்டர்ன் கிப்ட்'... மொத்த கிராமத்துக்கும் ரூ.34.6 கோடி இன்சூரன்ஸ்... மணமகன் நெகிழ்ச்சி!
திருமண விழாக்களில் ஆடம்பரமாகப் பணத்தைச் செலவழிப்பதும், வரும் விருந்தினர்களுக்கு விலையுயர்ந்தப் பொருட்களைப் பரிசாக (Return Gift) வழங்குவதும் தற்பொழுது வழக்கமாகிவிட்டது. ஆனால், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களது வீட்டுத் திருமணத்தில், ஒட்டுமொத்தக் கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கும் மாபெரும் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிப் புதியதொரு சரித்திரப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாந்தேடு (Nanded) மாவட்டத்தில் உள்ள பகதர்புரா (Bahadarpura) என்ற கிராமத்தில், சித்தேஸ்வர் பேத்கர் (Siddheshwar Pethkar) என்பவருக்கும் மஞ்சுஷா என்பவருக்கும் அண்மையில் மிக விமரிசையாகத் திருமணம் நடைபெற்று முடிந்தது. விழா முடிந்ததும் மணமகன் குடும்பத்தினர் சாமானிய கிராம மக்கள் அனைவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியைத் தந்தனர். வழக்கமான நினைவுப் பரிசுகளுக்குப் பதிலாக, தங்களது கிராமத்தில் உள்ள 3,465 குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான விபத்துக் காப்பீடு (Accident Insurance) பாலிசியைப் பரிசாக வழங்குவதாக அதிரடியாக அறிவித்தனர். இதன்படி, ஒட்டுமொத்தக் கிராமத்திற்கும் சேர்த்து மொத்தம் ரூ.34.6 கோடி மதிப்பிலான காப்பீட்டுப் பாதுகாப்பை அந்தக் குடும்பம் தன் சொந்தச் செலவில் எடுத்துள்ளது.
கிராமப்புறங்களில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் அன்றாட வேலைகளுக்குச் செல்லும்போது எதிர்பாராமல் நிகழும் பாம்புக்கடி, மின்னல் தாக்குதல், வனவிலங்கு தாக்குதல்கள் மற்றும் சாலை விபத்துகளால் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாக முற்றிலும் நடுத்தெருவுக்கு வந்துவிடுகின்றன. இந்த எதார்த்தமான கசப்பான உண்மையை உணர்ந்த மணமகனின் மூத்த சகோதரர் அனூப் பேத்கர், இந்த விசித்திரமான மற்றும் பயனுள்ள ஐடியாவைத் திட்டமிட்டுள்ளார். எவ்வித அலைச்சலோ, ஆவணச் சரிபார்ப்போ இல்லாமல் கிராம மக்கள் அனைவருக்கும் இந்த வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, கிராம பஞ்சாயத்தின் வாக்காளர் பட்டியலை நேரடியாகக் காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்ப்பித்து இந்த குரூப் இன்சூரன்ஸ் (Group Insurance) பாலிசியை அவர்கள் பெற்றுத் தந்துள்ளனர்.

இந்த இன்சூரன்ஸ் பாலிசிக்காக எவ்வளவு பிரீமியம் (Premium) தொகை செலுத்தப்பட்டது என்ற விவரத்தை மணமகன் குடும்பத்தினர் வெளியிட மறுத்துவிட்டனர். இதுகுறித்து மணமகன் சித்தேஸ்வர் கூறுகையில், "எங்கள் கலாச்சாரத்தில் தர்மம் செய்வதைத் தம்பட்டம் அடிக்கக் கூடாது. எங்களுக்குப் பாராட்டுகள் தேவையில்லை, மக்களின் ஆசிர்வாதமே போதும். எங்களின் வீட்டு மகிழ்ச்சி எங்கள் வீட்டோடு முடிந்துவிடாமல், ஒட்டுமொத்தக் கிராமத்திற்கும் ஒரு பாதுகாப்பாக மாற வேண்டும் என்று நினைத்தோம்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு வந்த கிராம மக்கள், "எங்கள் வாழ்நாளில் இப்படியொரு கல்யாணப் பரிசைப் பார்த்ததே இல்லை; எங்களுக்குச் 'சகுனமாக' ஒரு பாதுகாப்புப் போர்வையே கிடைத்தது போல் உள்ளது" என உணர்ச்சிப் பெருக்குடன் மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.
