மழை வேண்டி கழுதைகள், தவளைகளுக்கு நூதன திருமணம்... அசத்தல் வழிபாடு!

 
kazhuthai

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் நவலகுந்து தாலுகாவில் சிரூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் போதிய அளவு மழை பெய்யாமல் பொய்த்துப் போனதால், சிரூர் கிராமத்து விவசாயிகள் சாகுபடி செய்திருந்த பயிர்கள் அனைத்தும் கருகத் தொடங்கின. இதனால் மிகவும் கவலையடைந்த கிராம மக்கள், தங்களின் விவசாயத்தைக் காப்பாற்றவும் வறட்சியைப் போக்கவும் வருண பகவானை வேண்டி ஒரு ஜோடி கழுதை மற்றும் ஒரு ஜோடி தவளைகளுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

Frog Weddings, Megh Malhar And Other Unusual Indian Customs To Invoke The Monsoon

இந்த வினோதமான திருமண விழாவை முன்னிட்டு சிரூர் கிராம மக்கள் அனைவரும் மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார் என 2 தனித்தனி குழுக்களாகப் பிரிந்து உற்சாகமாகச் செயல்பட்டனர். இதில் ஆண் கழுதைக்குக் காந்தேஷ் என்றும், பெண் கழுதைக்குக் கஸ்தூரி என்றும் அழகாகப் பெயரிடப்பட்டுத் திருமணச் சடங்குகள் தொடங்கின. மணமக்களாகத் தேர்வு செய்யப்பட்ட அந்த ஒரு ஜோடி கழுதைகளுக்கும், ஒரு ஜோடி தவளைகளுக்கும் மாலைகள் அணிவித்து, வண்ண மலர்களால் அலங்கரித்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

முறையாகத் திருமணச் சடங்குகள் நடந்தபோது அங்கிருந்த கிராம மக்கள் அனைவரும், நிஜ மணமக்களுக்கு அட்சதை தூவி ஆசி வழங்குவது போலக் கழுதைகள் மற்றும் தவளைகளுக்கு அட்சதை தூவி ஆசி வழங்கினர். மேலும் தங்களின் சிரூர் கிராமத்தில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என வருண பகவானுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து மனமுருக வழிபட்டனர். இந்த நூதன வழிபாட்டுத் திருமணத்தின் இறுதியில் கழுதைகளுக்குச் சிறப்பு உணவுகள் பரிமாறப்பட்டதோடு, கலந்து கொண்ட அனைவருக்கும் தடபுடலான உணவு விருந்து வைக்கப்பட்டது.