கல்யாணத்துக்கு செலவு பண்ணாதீங்க... ₹20 லட்சம் ஆடம்பரச் செலவு... ஆடிட்டர் அதிர்ச்சி பதிவு!
இந்தியச் சமூகத்தில் திருமணங்கள் இரு மனங்களின் இணைப்பாக மட்டுமின்றி, கௌரவத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுவதால் பல குடும்பங்கள் கடனாளி ஆகின்றன. இந்நிலையைச் சுட்டிக்காட்டி பெங்களூரைச் சேர்ந்த மீனால் கோயல் என்ற பெண் பட்டயக் கணக்காளர் சமூக வலைதளத்தில் இட்ட பதிவு விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உறவினர்களைக் கவர வேண்டும் என்பதற்காகவே ₹20 லட்சம் வரை ஆடம்பரமாகச் செலவு செய்வது மிகப்பெரிய நிதி சார்ந்த தவறாகும் என அவர் ஓபனாகத் தெரிவித்துள்ளார். வந்த உறவினர்கள் அடுத்த வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடுகின்றனர்; ஆனால் குடும்பத்திற்கு எஞ்சுவது நிதி நெருக்கடி மட்டுமே என அவர் ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள கணக்கீட்டின்படி, ₹20 லட்சம் பட்ஜெட்டில் உணவிற்காக ₹6 லட்சம், மண்டபத்திற்கு ₹5 லட்சம், அலங்காரத்திற்கு ₹3 லட்சம் செலவிடப்படுகிறது. மேலும் புகைப்படம் எடுக்க ₹2 லட்சம், இசை நிகழ்வுகளுக்கு ₹2 லட்சம், இதர செலவுகளுக்கு ₹2 லட்சம் எனத் தொகையானது சில மணி நேரங்களிலேயே கரைகிறது. இந்தத் தொகையை ஆடம்பரமாகக் கரைப்பதற்குப் பதிலாக, சொந்த வீடு வாங்குவதற்கான முன்பணம், அவசரகால நிதி, நீண்டகால முதலீடுகளுக்குச் சேமித்து வைக்கலாம் என்று அவர் யோசனை கூறியுள்ளார். திருமணத்தைப் பிரம்மாண்டமாகக் கட்டியெழுப்பாமல், புதுமணத் தம்பதிகளின் எதிர்கால வாழ்க்கையைக் கட்டியெழுப்பத் திட்டமிடுங்கள் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வைரல் பதிவு வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கருத்துகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நடக்கும் நிகழ்வு என்பதால், விருப்பமான முறையில் செலவழித்து நினைவுகளை உருவாக்குவதில் தவறில்லை என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். அதேவேளையில் ஆடம்பரத்திற்காகக் கடன் வாங்கிப் பந்தா செய்வதை விட, எளிமையாகத் திருமணம் செய்து எதிர்காலத்தைச் சேமிப்பதே புத்திசாலித்தனம் என மற்றொரு தரப்பினர் ஆதரிக்கின்றனர்.
