ரகசியமாக 2வது திருமணம் செய்ய முயன்ற கணவன்... மேடையில் ஏறி கலாட்டா செய்த முதல் மனைவி... வைரல் வீடியோ!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு சமீபகாலமாக மனைவியுடன் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனையடுத்து மனைவியைப் பிரிய எண்ணி அவர் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்குத் தொடுத்துள்ளார். அந்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் சூழலில், மனைவியிடம் இருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல் மறைமுகமாக 2-வது திருமணம் செய்ய முடிசு செய்தார். இதற்காகத் திருமண மண்டபத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து ரகசியமாகத் திருமணத்திற்குத் தயாராகியுள்ளார்.
கணவன் 2-வது திருமணம் செய்து கொள்ளும் தகவல் அறிந்த முதல் மனைவி உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். காவல் துறையினரின் உதவியுடன் நேரடியாகத் திருமண மண்டபத்திற்குச் சென்ற அவர், மேடையில் நின்றிருந்த கணவனை கையும் களவுமாகப் பிடித்தார். "நான் தான் இவரின் முதல் மனைவி, இந்தத் திருமணம் செல்லாது" எனக் கூறி திருமண மேடையிலேயே உரத்த குரலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மனைவியின் திடீர் வருகையாலும் காவல் துறையினரின் நுழைவாலும் திருமண மண்டபமே பெரும் கூச்சல் குழப்பத்தில் ஆழ்ந்தது.முதல் மனைவியைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த கணவன் அங்கிருந்து நழுவித் தப்பியோட முயற்சி செய்துள்ளார். ஆனால் அங்கிருந்த காவல் துறையினர் அவரை பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே காட்டுத்தீ போல வைரலாகி வருகிறது.
